தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்களில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் (57), தீபாவளி இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
தேனி பங்களாமேட்டில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த அவர், சமதர்மபுரம் பிரதான சாலையில் மதுபோதையில் பட்டாசுகளை வெடித்து ரகளை செய்துகொண்டிருந்த இளைஞர்களைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், செந்தில்குமாரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மகேஸ்வரன், சூரியமூர்த்தி, தீபன்ராஜ், பரத்பிரனேஷ், ஆகாஷ், கவுதம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 40 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
திருச்சி சமயபுரம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரி அருகே விஷால் (17), ராகுல் (17) ஆகிய இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அதே பகுதியில், பட்டாசு வெடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஐடி ஊழியர் கிறிஸ்டோபர் (21) என்பவர், டொனால்ட் என்பவரால் ஸ்பேனரால் குத்திக் கொல்லப்பட்டார்.
பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில், கோயில் வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ரவி (50), பட்டாசு வெடித்ததைக் கண்டித்ததால் அருள்ராஜ் என்பவரால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கடலூர் பகுதியில் ரவுடி பிருத்விராஜன் (26) மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். அவரைத் தாக்கிய அருளரசனைப் பிடிக்கச் சென்றபோது, உதவி ஆய்வாளர் முகிலரசுவை கத்தியால் வெட்டியதால், காவல் ஆய்வாளர் இளவரசி துப்பாக்கியால் சுட்டு அருளரசனைப் பிடித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சொத்துத் தகராறில் பாலசுப்ரமணியன் (70) என்பவர், தணிகைவேல் என்பவரால் தள்ளிவிடப்பட்டதில் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். சென்னை வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் தனுஷ் (19), அப்புக்குட்டி மற்றும் அவரது கூட்டாளிகளால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். காஞ்சிபுரத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே பார்த்திபன் (32) என்பவர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
காரைக்குடியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி தங்கச்சாமி என்ற நவீன் (26) காரில் வந்த கும்பலால் கொலை செய்யப்பட்டார்; இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானாமதுரை அருகே விக்னேஷ் (24) என்பவரும், விருதுநகர் அருகே அன்புச்செல்வம் (25) என்பவரும் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் குடும்பத் தகராறில் மனைவி சுவேதாவை (26) கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவர் அஜீத்குமார் (28) காவல் நிலையத்தில் சரணடைந்தார்.



