தமிழகத்தில் நெல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், நியாயமான விலையில் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யவும், 'நெல்/அரிசி (இருப்பு வரம்பு) கட்டுப்பாட்டு ஆணை, 2026'-ஐ தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
புதிய விதிகளின்படி, மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 2,000 மெட்ரிக் டன் நெல் அல்லது அரிசியை மட்டுமே இருப்பு வைக்க முடியும். சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களின் கிளைகள் தலா 8 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள், தங்களது ஒரு மாத கால உற்பத்தித் திறனுக்கு இணையான அளவை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும்.
இறக்குமதியாளர்கள், சுங்க அனுமதி பெற்ற பிறகு 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்திருக்கக் கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.


