மதுரை நேரு நகரில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் மர்ம நபர்கள் புகுந்து 35 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 15 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்தக் கடையில், இன்று காலை ஊழியர்கள் வந்தபோது பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
அதிகாலை 3 மணி அளவில் முகமூடி அணிந்த மூன்று நபர்கள், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தின் சாரம் வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. லிஃப்ட் அமைப்பதற்கான பகுதி வழியாக அவர்கள் உள்ளே சென்றிருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், கடையில் இருந்த நகைகளில் 30 சதவீதம் திருடு போயுள்ளதாகவும், அதன் மதிப்பு குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். கொள்ளையர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் கட்டுமானத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


