சத்புரா புலிகள் காப்பகத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றும் சஞ்சீவ் குமார் சர்மாவுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா சிறப்பு காவல் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், சர்மாவின் அறியப்பட்ட வருமானத்தை விட 560 சதவீதம் அதிகமாக, சுமார் ரூ.7.6 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையின்போது ரூ.26.36 லட்சம் ரொக்கம், 2.5 கிலோ தங்கம் மற்றும் 1.6 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு சொகுசு விடுதி, ஒரு வில்லா, பல வாகனங்கள் மற்றும் பல்வேறு நிலப் பரிவர்த்தனை ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சொத்துகள் அனைத்தும் சர்மாவின் மனைவி மற்றும் சில தனிநபர்களின் பெயரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சஞ்சீவ் குமார் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் இறுதி மதிப்பீடு தொடர்ந்து நடைபெற்று வருவதால், சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




