இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பால் மற்றும் தயிர், பன்னீர் உள்ளிட்ட பால் சார்ந்த அனைத்து பொருட்களின் பேக்கேஜிங்கிலும் நீல மற்றும் வெள்ளை நிறத்திலான துளி வடிவ லோகோவை அச்சிடுவதை கட்டாயமாக்கியுள்ளது. நுகர்வோர் எளிதில் அடையாளம் காணும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறை, வரும் 2028-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பான அறிவிப்பு, கடந்த நவம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (லேபிளிங் மற்றும் காட்சிப்படுத்துதல்) இரண்டாவது திருத்த ஒழுங்குமுறைகள், 2026-ன் கீழ் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியாகியுள்ளது. ஒழுங்குமுறை விழிப்புணர்வை மேம்படுத்தவும், லோகோ பயன்பாட்டில் சீரான தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக FSSAI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்புகளின் பேக்கேஜிங் அளவைப் பொறுத்து லோகோவின் குறைந்தபட்ச பரிமாணங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளும் இதில் வரையறுக்கப்பட்டுள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வரைவு முன்மொழிவின் மீது பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்த பின்னரே, இந்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.




