காந்தி குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட விவகாரத்தில், பாஜக எம்.பி கங்கனா ரனாவத் மீது ஹிமாச்சலப் பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓய்வுபெற்ற கேப்டன் அதுல் சர்மா அளித்த புகாரின் அடிப்படையில், சிம்லாவில் நவம்பர் 13-ம் தேதி இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த கருத்துகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி குறித்து நவம்பர் 10-ம் தேதி கங்கனா ரனாவத் பதிவிட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) 196(1)(b), 353(2) மற்றும் 356(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதை சிம்லா காவல் கண்காணிப்பாளர் கௌரவ் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், பகைமையை வளர்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள புகார்தாரர், அந்தப் பதிவு குறித்து காலக்கெடுவுக்குள் சைபர் தடயவியல் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.




