ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 32 வயது மருத்துவர் லாவண்யா குங்குலா உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் நரம்பியல் துறையில் முதுகலை பயின்ற இவர், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மயாஸ்தீனியா கராவிஸ் எனும் அரிய வகை தன்னுடல் தாக்க நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு தைமஸ் சுரப்பி நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்ட போதிலும், நான்கு மாதங்களிலேயே அவர் மீண்டும் பணிக்குத் திரும்பினார். கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கியதோடு, மயாஸ்தீனியா கராவிஸ் நோய் குறித்த விழிப்புணர்வை சமூக வலைதளங்கள் வாயிலாக ஏற்படுத்தி வந்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆதரவு குழு ஒன்றையும் அவர் நிர்வகித்து வந்தார்.
மருத்துவர் லாவண்யாவின் மறைவு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், மயாஸ்தீனியா கிரைசிஸ் தீவிரமடைந்ததால் சுவாசத் தசைகள் செயலிழந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். நோயின் பாதிப்புக்கு மத்தியிலும் அவர் ஆற்றிய மருத்துவச் சேவைகளைப் பாராட்டி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




