நடிகர் தனுஷின் புதிய திரைப்படமான ‘OM’ படத்தின் தலைப்பு திடீரென ‘O.M – Operation Mole’ என மாற்றப்பட்டிருப்பது திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஏற்கெனவே விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திலும் ‘OM’ என்ற சொல் மாற்றப்பட்டிருந்தது தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரண்டு பெரிய திரைப்படங்களிலும் ஒரே சொல்லுக்கு ஏன் ஆட்சேபனை எழுந்தது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
தனுஷின் படத்தில் என்ன நடந்தது?
‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘OM’.
முதலில் ‘OM – Chapter 1: Udhiram – The Blood Wood’ என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் பெயர், தற்போது ‘O.M – Operation Mole’ என மாற்றப்பட்டுள்ளது.
நவம்பர் 13ஆம் தேதி இரவு 7 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்ட நேரத்தில் வெளியாகவில்லை. வெளியீடு தாமதமாவதாகப் படக்குழுவும் சமூக வலைதளத்தில் தெரிவித்தது. பின்னர் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
தலைப்பு மாற்றம் மற்றும் ட்ரெய்லர் தாமதம் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானாலும், தாமதத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.
‘OM’ என்ற சொல்லில் என்ன பிரச்சினை?
‘ஓம்’ என்பது இந்து சமயத்தில் புனிதமான ஒலியாகவும் ஆன்மிக அடையாளமாகவும் கருதப்படுகிறது.
இத்தகைய மத அடையாளங்களைத் திரைப்படத் தலைப்புகளிலும் வசனங்களிலும் பயன்படுத்தும்போது அவை இடம்பெறும் சூழல் குறித்து தணிக்கைக் குழு ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்புள்ளது.
தனுஷின் திரைப்படத் தலைப்பு மாற்றத்திற்கும் இதுபோன்ற தணிக்கை ஆட்சேபனைகளே காரணமாக இருக்கலாம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய தலைப்பில் ‘O.M’ என்பது ‘Operation Mole’ என்ற ரகசிய காவல்துறை நடவடிக்கையைக் குறிக்கிறது. இதனால் மத அடையாளமாகப் பொருள்படக்கூடிய ‘OM’ என்ற சொல்லுக்கு மாற்றாக, கதையுடன் தொடர்புடைய ஆங்கிலச் சுருக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மத உணர்வுகளே இந்த மாற்றத்திற்குக் காரணம் எனத் தணிக்கைக் குழுவோ படக்குழுவோ தெளிவாக அறிவிக்கவில்லை.
‘ஜனநாயகன்’ படத்திலும் இதே விவகாரம்!
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்திலும் இதேபோன்ற மாற்றம் ஏற்கெனவே நடைபெற்றுள்ளது.
அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘Operation OM’ என்ற குறிப்பு, திரையரங்கப் பதிப்பில் ‘Operation MM’ என மாற்றப்பட்டது.
‘Operation Meluha’ தொடர்பான காட்சியில் பயன்படுத்தப்பட்ட ‘OM’ என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) அறிவுறுத்தியிருந்ததாக அப்போது வெளியான தணிக்கை விவரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ‘பகவதம்’, ‘ரங்கநாதர்’ உள்ளிட்ட மதம் தொடர்பான சொற்களுக்கும் தணிக்கைக் குழு ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இதனுடன் அரசியல் வசனங்கள் மற்றும் சில காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.




