கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே பகுதியில், வால்மார்ட் வாகன நிறுத்துமிடத்தில் நவம்பர் 15 அன்று இரவு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது ககன்ப்ரீத் ரேஹல் மற்றும் 24 வயது சுக்ப்ரீத் கவுர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டெல்டா பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் ஜன்னல்கள் உடைந்த நிலையில் சிவப்பு நிற மஸ்டாங் கார் கண்டெடுக்கப்பட்டது.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையது என்றும் ஒருங்கிணைந்த கொலை விசாரணை குழு (IHIT) தெரிவித்துள்ளது. ரேஹல் மீது ஏற்கனவே ஆயுதக் குற்றச்சாட்டுகள் உள்ளதாக காவல்துறை அதிகாரி ஃப்ரெடா ஃபாங் குறிப்பிட்டார். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே, பிரின்சஸ் டிரைவ் பகுதியில் உள்ள 9700 பிளாக்கில் எரிந்த நிலையில் வாகனம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது சந்தேக நபர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கருதி, குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.




