மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் மீண்டும் தமிழகத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஒரு தீபம் ஏற்றுவதற்கு ஏன் இவ்வளவு பெரிய பிரச்சினை? இந்த விவகாரத்தில் இந்து, முஸ்லிம் தரப்பினர் என்ன சொல்கிறார்கள்? தமிழக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது? நீதிமன்றம் என்ன உத்தரவிட்டிருக்கிறது?
இந்தப் பிரச்சினையின் பின்னணியை எளிமையாகப் பார்க்கலாம்.
முதலில் திருப்பரங்குன்றத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வோம்.
மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்குகிறது.
இந்த மலையில் புகழ்பெற்ற முருகன் கோயில் மட்டுமல்லாமல், உச்சிப் பிள்ளையார் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன.
பல நூற்றாண்டுகளாக இந்துக்களும் முஸ்லிம்களும் இந்த மலையுடன் தொடர்புடைய வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படியானால் பிரச்சினை எங்கு ஆரம்பித்தது?
திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது.
வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
ஆனால், மலையின் மேல்பகுதியில் தர்காவுக்கு அருகே இருக்கும் ஒரு கல் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று சில இந்து அமைப்புகளும் பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்தக் கல் தூண் பழங்காலத்தில் தீபம் ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 'தீபத்தூண்' என்பது அவர்களுடைய வாதம்.
ஆனால் தமிழக அரசுத் தரப்போ, அது தீபத்தூண் என்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்றும், பழைய நில அளவைக் குறிக்கும் தூணாக இருக்கலாம் என்றும் கூறுகிறது.
அதேபோல், அந்த இடத்தில் தீபம் ஏற்றுவது பாரம்பரியமாக நடைபெற்று வந்த வழிபாடா என்பதிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இதில் முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு என்ன?
மலையின் மேல்பகுதியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.
தர்காவைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகள் தொடர்பாக முஸ்லிம் தரப்பினருக்கு வரலாற்று ரீதியான உரிமைகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
சர்ச்சைக்குரிய இடத்தில் புதிய வழிபாட்டு நடைமுறையை அனுமதிப்பது, ஏற்கெனவே உள்ள உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என்பது அவர்களுடைய கவலை.
இதனால், அந்தக் குறிப்பிட்ட இடத்தின் உரிமை யாருக்கு என்பதும் முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.
இந்தப் பிரச்சினை இப்போது மட்டும் உருவானதா?
இல்லை!
திருப்பரங்குன்றம் மலையின் நில உரிமை தொடர்பான வழக்குகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளன.
1923ஆம் ஆண்டிலேயே மலை தொடர்பான நில உரிமை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகும் குறிப்பிட்ட இடங்களின் எல்லைகள், வழிபாட்டு உரிமைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்துள்ளன.
1996ஆம் ஆண்டிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.




