மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு 24 நாட்களுக்கு முன்பே இந்தியாவில் ரூ.52.21 கோடி முன்பதிவு வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் முந்தைய மார்வெல் படமான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது. நாடு முழுவதும் 7,611 காட்சிகளுக்கு சுமார் 8.25 லட்சம் டிக்கெட்டுகள் இதுவரை விற்பனையாகியுள்ளன.
உலகளவில் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகும் இப்படம், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதல் நாள் காட்சிகள் ஏறக்குறைய நிரம்பிவிட்டன. ரசிகர்களின் அதீத வரவேற்பால், 24 மணி நேரமும் இடைவிடாத காட்சிகளுக்கு பல்வேறு திரையரங்குகள் ஏற்பாடு செய்துள்ளன.
ரூசோ ப்ரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் டாக்டர் டூம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கிறிஸ் எவான்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், மூன்று வெவ்வேறு மார்வெல் யுனிவர்ஸ்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து வில்லனை எதிர்கொள்ளும் கதையம்சத்தைக் கொண்டுள்ளது.



