கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று, ஜூன் 11 அன்று தொடங்குகிறது. இந்த முறை 32 அணிகளுக்கு பதிலாக 48 அணிகள் பங்கேற்கின்றன. 39 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 1248 வீரர்கள் களமிறங்குகின்றனர். இதில் 891 வீரர்கள் உலகக்கோப்பையில் முதல்முறையாக விளையாடுகின்றனர்.நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி தகுதி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகள் முதல்முறையாக உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளன.புதிய விதிமுறைகளின்படி, 48 அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளும் (24 அணிகள்), சிறந்த எட்டு மூன்றாவது இட அணிகளும் நாக்-அவுட் சுற்றான ரவுண்ட் ஆஃப் 32-க்கு முன்னேறும். காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள 82,500 பேர் அமரக்கூடிய மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறும்.சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.476 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. FIFA மொத்தம் ரூ.6,236 கோடியை பரிசுத் தொகையாக ஒதுக்கியுள்ளது. கோப்பையின் மதிப்பு மட்டும் ரூ.191 கோடியாகும்.கால்பந்து உலகின் மூன்று ஜாம்பவான்களான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி (38), போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (41) மற்றும் பிரேசிலின் நெய்மர் ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 கத்தார் உலகக்கோப்பையில் மெஸ்ஸி தனது நீண்டநாள் கனவான கோப்பையை வென்றார். ரொனால்டோவுக்கு உலகக்கோப்பை மட்டுமே வெல்லாத ஒரே முக்கிய கோப்பையாக உள்ளது. தொடர் காயங்களால் நெய்மரின் பங்கேற்பு மற்றும் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
1Likes
0Dislikes
