ஜப்பானின் குமமோட்டோ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், காஷிமா நகரில் உள்ள ஏயான் வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கட்டிடத்தின் இரண்டாவது தளம் சரிந்ததில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வணிக வளாகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கியூஷு பிராந்தியம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குமமோட்டோ விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன; தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இரண்டு பின்அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் தீ விபத்துகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக பிரதமர் சனாயே தகைச்சி தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் எந்தவித அசாதாரண சூழலும் இல்லை என அமைச்சரவை தலைமைச் செயலாளர் மினோரு கிஹாரா உறுதிப்படுத்தியுள்ளார். அவசரக்கால மீட்புக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





