செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தொடரின் இறுதி நாளுக்கு முந்தைய சுற்றிலேயே, ஜவோகிர் சிந்தரோவ் உடனான ஆட்டத்தை டிராவில் முடித்ததன் மூலம் பிரக்ஞானந்தா இந்த வெற்றியை உறுதி செய்தார். இறுதிச் சுற்றில் லெவோன் அரோனியனுடன் டிரா செய்த அவர், மொத்தம் 36 புள்ளிகளுக்கு 23.5 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 27 ஆட்டங்களில் விளையாடிய அவர், இரண்டில் மட்டுமே தோல்வியடைந்தார். இது பிரக்ஞானந்தா வெல்லும் முதல் கிராண்ட் செஸ் டூர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பட்டமாகும்.
தொடரின் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரேபிட் பிரிவின் முதல் நாளிலேயே முன்னிலை பெற்ற அவர், பிளிட்ஸ் பிரிவுக்குச் செல்லும்போதும் அந்த முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டார். ஒன்பது சுற்றுகள் கொண்ட பிளிட்ஸ் பிரிவின் முடிவில் தனது முன்னிலையை 1.5 புள்ளிகளாக அவர் உயர்த்தினார். இறுதி நாளில் மூன்று வெற்றிகளைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, ஒரு சுற்று மீதமிருக்கையிலேயே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

