உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் தனியார் பங்குகளை விற்பனை செய்வதற்காக முன்மொழியப்பட்ட 20 பில்லியன் டாலர் மதிப்பிலான சர்ச்சைக்குரிய திட்டத்தை ஃபிஃபா கைவிட்டுள்ளது. கால்பந்து சங்கங்கள், ரசிகர்கள் மற்றும் ஃபிஃபா ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பிய இந்தத் திட்டத்தால் விளையாட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஃபிஃபா தலைவர் ஜியானி இன்பான்டினோ ஒப்புக்கொண்டார். வணிகம் மற்றும் செயல்பாட்டு உரிமைகளுக்காகத் தனி நிறுவனம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (UEFA) உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இந்தத் திட்டம் கால்பந்தின் எதிர்காலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி ஃபிஃபா மூத்த ஆலோசகர் கார்லோஸ் கார்டெய்ரோ தனது பதவியை ராஜினாமா செய்தார். ஃபிஃபா தலைமை செயல்பாட்டு அதிகாரி கெவின் லாமூர், இது ஒரு தனிநபரின் திட்டம் என விமர்சித்திருந்தார். இந்தத் திட்டத்தைக் கைவிட்டதை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. கால்பந்தின் எதிர்காலத்தை கூட்டு ஆலோசனைகள் மூலம் தீர்மானிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள இன்பான்டினோ, கால்பந்து சமூகத்தை ஒன்றிணைக்கும் பணிகளில் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

