ஜப்பானின் நகோயா நகரில் உள்ள மிசுஹோ பூங்கா தடகள மைதானத்தில், 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. ஜப்பானியப் பேரரசர் நருஹிட்டோ போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேரரசி மசாகோ, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் ஜோவான் பின் ஹமத் அல் தானி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 விளையாட்டு வீரர்களும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அகதிகள் அணியினரும் பங்கேற்கின்றனர். மொத்தம் 43 விளையாட்டுப் பிரிவுகளில் 469 தங்கப் பதக்கங்களுக்காகப் போட்டியாளர்கள் களமிறங்குகின்றனர்.
இந்தியாவின் சார்பில் 501 பேர் கொண்ட குழு பங்கேற்கிறது. இந்திய அணியின் அணிவகுப்பின்போது, ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் செராவத் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்சூ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 106 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்தியா, இம்முறை அதைவிடச் சிறந்த வெற்றியைப் பதிவு செய்யும் இலக்குடன் களமிறங்கியுள்ளது.



