இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 9 வரையிலான காலகட்டத்தில், சுமார் 886 கோடி ரூபாய் மதிப்பிலான பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 900-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 259 சாலைகள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; 161 மின்மாற்றிகள் மற்றும் 54 குடிநீர் திட்டங்கள் செயலிழந்துள்ளன. மண்டி-குல்லு நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளதால், மண்டி மற்றும் குல்லு மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், சிம்லா மற்றும் மண்டி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலைத் தொடர்புகளைச் சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



