பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், 40 வயதான எஸ்.ஜி. இம்ரான் என்பவர் தனது இரண்டு சிறுமிகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். ஷேக் ஜோயா (10) மற்றும் ஷேக் ஜெஹாரா (5) ஆகிய அந்தச் சிறுமிகள், தந்தை அறையை காலி செய்யாததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்களால் கண்டெடுக்கப்பட்டனர். இது குறித்து ஹோட்டல் நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, இம்ரான் கழுத்தில் காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்தார். அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். தனியார் கார் நிறுவன மேலாளராகப் பணியாற்றி வந்த இம்ரான், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் மற்றும் குடும்பத் தகராறு காரணமாகவே இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


