சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை லடாக் யூனியன் பிரதேசம் மேற்கொள்ள உள்ளது. 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக, பதிலளிப்பவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடுவதற்கு ஏதுவாக, திறந்தநிலை நெடுவரிசை (open-ended column) முறை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த முறை ஏற்கனவே இந்த ஆண்டு 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. தேசிய அளவிலான கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடைபெறவிருந்தாலும், எல்லைப் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை புவிசார் குறியீடு (geo-tagging) செய்ய முடியாத காரணத்தால், லடாக்கில் காகித வடிவிலான படிவங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2026 செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளன. இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 31 வரை சுய கணக்கெடுப்புக்கான கால அவகாசம் வழங்கப்படும். இதற்கான பயிற்சி வகுப்புகளை முதன்மைப் பயிற்சியாளர்கள் ஏற்கனவே முடித்துள்ளனர். இறுதி கேள்வித்தாள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இதில் சுமார் 40 அளவீடுகள் இடம்பெறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011-ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்த தரவு நம்பகத்தன்மை சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், இந்த முறை தரப்படுத்தப்பட்ட சேகரிப்பு முறையுடன் சாதி அடையாளத்திற்கான திறந்தநிலை நெடுவரிசை முறை பின்பற்றப்பட உள்ளது.



