நேபாளம் மற்றும் திபெத் இடையிலான முக்கிய எல்லைப் பகுதியான கைரோங் துறைமுகத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காட்சிகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் அந்தப் பயங்கரமான காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவின.
ஆனால், சீனாவில் இந்தத் துயரச் சம்பவம் குறித்த முழுமையான காணொளிகள் ஒளிபரப்பப்படவில்லை. அந்நாட்டின் அரசு ஊடகங்கள் ஒரு புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டன.
சீன இணையதளங்களில் கடும் தணிக்கை நிலவுவதால், நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய இந்த வெள்ளம் குறித்த நேரடித் தகவல்களோ, பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளோ கிடைப்பது அரிதாக உள்ளது.
இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்களைக் கொண்டு சீனா தீவிர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அதிபர் ஜி ஜின்பிங் அவசரக் கூட்டத்தைக் கூட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும், உலகமே இந்த இமயமலைப் பள்ளத்தாக்கு துயரம் குறித்துச் செய்திகளை வெளியிட்டபோது, சீனாவின் அரசு ஊடகங்கள் அதிபர் ஜி ஜின்பிங்கின் புதிய புத்தக வெளியீட்டுச் செய்திக்கே முன்னுரிமை அளித்தன. வடகொரியாவை விட திபெத்தில் தகவல்களைப் பெறுவது கடினமாக இருப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.




