பிரபலங்களின் மேலாளராகப் பணியாற்றிய திஷா சாலியன் 2020-ம் ஆண்டு உயிரிழந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்த பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திஷா சாலியனின் தந்தை சதீஷ் சாலியன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித்சிங் ராஜா போன்ஸ்லே அடங்கிய அமர்வு, இந்த வழக்கை சிபிஐ பதிவு செய்து, மூத்த அதிகாரி ஒருவரின் கீழ் விசாரணையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மும்பையின் மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியிலிருந்து விழுந்து திஷா சாலியன் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி உயிரிழந்தார். உள்ளூர் காவல்துறையினர் இது தொடர்பாக தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரணை முடித்திருந்த நிலையில், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சதீஷ் சாலியன் குற்றம் சாட்டியிருந்தார். சிபிஐ விசாரணையின் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.






