விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழக போக்குவரத்துத் துறை சிறப்புக்குழுக்களை அமைத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
இந்தக் குழுவினர் முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள். கூடுதல் கட்டணம் வசூலிப்பது அல்லது விதிமுறைகளை மீறுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் பேருந்துகளின் அனுமதி ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பண்டிகை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தச் சூழலில், வழக்கமான கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

