விசா மோசடி புகார்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால், காக்னிசன்ட் மற்றும் கிளவுடெரா ஆகிய நிறுவனங்களின் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் விண்ணப்பங்களை அமெரிக்க தொழிலாளர் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, ஆய்வாளர் ஜெனரல் அந்தோணி டி'எஸ்போசிட்டோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையின் மோசடி தடுப்புப் பிரிவு மற்றும் பிற மத்திய அதிகாரிகளுடன் இணைந்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான முதல் படியாகக் கருதப்படும் 'பெர்ம்' (PERM) செயல்முறையின் கீழ், அந்தந்த பணிகளுக்குத் தகுதியான அமெரிக்கர்கள் யாரும் இல்லை என்பதை நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும். சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது நியூஜெர்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் காக்னிசன்ட் நிறுவனம், தனது விசா நடைமுறைகள் தொடர்பாகக் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தரவுகளின்படி, கடந்த ஜூன் 30 நிலவரப்படி அந்நிறுவனம் 3,510 எச்-1பி விசா மனுக்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது; இது 2020-ஆம் ஆண்டில் 9,413 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.






