இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் வான் பரப்பில் பரவியதால், 300-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் காலை 5:30 மணி முதல் தனது சேவைகளை நிறுத்தியதால் சுமார் 22,800 பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்த பாதிப்பால் சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல், தோகா மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கான விமானங்களும், பாலி, சுராபாயா போன்ற உள்நாட்டு நகரங்களுக்கான விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. விமான நிலையங்களில் பயணிகள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறவும், உடைமைகளை மீட்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
செயற்கைக்கோள் தரவுகளின்படி, எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் மேகங்கள் 20,000 அடி முதல் 50,000 அடி உயரம் வரை வான் பரப்பில் பரவியுள்ளன. இந்த சாம்பல் மேகங்கள் ஜகார்த்தா, சுண்டா ஜலசந்தி மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் வான்வெளியைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



