பசிபிக் பெருங்கடலில் கரீனா, லோவெல் மற்றும் மேரி ஆகிய மூன்று சூறாவளிகள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன. தீவிரமான எல் நினோ நிகழ்வே இந்த சூறாவளி அதிகரிப்புக்குக் காரணம் என காலநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் லோவெல் சூறாவளி, வகை 5 தீவிரத்திலிருந்து வகை 3 ஆகக் குறைந்து, இந்த வார இறுதியில் ஓவாஹு மற்றும் கவாய் தீவுகளுக்கு அருகே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரீனா சூறாவளி ஹவாய் தீவுகளுக்குக் கிழக்கே வலுவிழந்து வரும் நிலையில், மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா தீபகற்பக் கடற்கரை அருகே மேரி சூறாவளி வலுவடைந்து வருகிறது.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கணிப்புப்படி, இந்த எல் நினோ நிகழ்வு வரலாற்றிலேயே மிக வலுவானதாக மாறுவதற்கு 69 சதவீத வாய்ப்புள்ளது. பசிபிக் கடலில் சராசரியை விட கடல் நீர் வெப்பநிலை அதிகமாக இருப்பது சூறாவளிகள் தீவிரமடையக் காரணமாகிறது. ஜனவரி முதல் பசிபிக் பெருங்கடலில் சுமார் 94 சதவீதப் பகுதியில் நீடித்த கடல் வெப்ப அலை நிலவுவது இந்தச் சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது. அதேசமயம், அட்லாண்டிக் பகுதியில் சூறாவளி உருவாக்கம் குறைவாகவே உள்ளது. தீவிரமடைந்து வரும் இத்தகைய வானிலை மாற்றங்கள் குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வெப்பமடைந்து வரும் கடல் நீரால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க உலகளாவிய காலநிலை நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.



