அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறுவது போர் அல்ல, அது அவ்வப்போது நிகழும் ராணுவ மோதல் மட்டுமே என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த மோதல்களில் அமெரிக்க ராணுவத்தினர் 18 பேர் உயிரிழந்துள்ள போதிலும், இதனை வியட்நாம் அல்லது ஆப்கானிஸ்தான் போர்களுடன் ஒப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைத் தடுத்துள்ளதாகவும், ஹார்மூஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் பகுதிகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருந்தால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்தார். ஈரான் விவகாரத்தில் சீனாவின் தலையீடு மிகக் குறைவாகவே இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். ஈரானின் பொருளாதார மீட்சிக்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதாக ஈரான் ராணுவ மூத்த தளபதி அலிரேசா எல்ஹாமி தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள ஈரான் ராணுவம் தயாராக இருப்பதாகவும், தங்களது ஆயுதங்கள் எதிரிகளை முறியடிக்கும் திறன் கொண்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.


