பிலிப்பைன்ஸ் நாட்டின் பலவான் மாகாணத்தில் உள்ள கொரோன் அருகே, எம்/வி ஜூன் ஆஸ்டர் (M/V June Aster) என்ற பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மணிலாவிலிருந்து சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பல், பரங்கே மார்சில்லா பகுதிக்கு வடகிழக்கே சுமார் 1.2 கடல் மைல் தொலைவில் இருந்தபோது புதன்கிழமை மாலை தீப்பிடித்தது.
கப்பலில் மொத்தம் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் இருந்ததாக மெரைன் டிராஃபிக் தரவுகள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்த பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையினர் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து பயணிகளைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




