அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா நடைமுறையில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இது தொடர்பான விசா கட்டணத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, 100,000 டாலர் மதிப்பிலான இந்த விசா கட்டணம் செப்டம்பர் 21, 2027 வரை நடைமுறையில் இருக்கும். 'எச்-1பி விசா திட்டத்தின் ஒருமைப்பாடு மற்றும் இடைநிலை ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் செப்டம்பர் 18, 2026 அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திறமையான அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதிலாக, குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்க சில நிறுவனங்கள் இந்த விசா முறையை தவறாகப் பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது. எச்-1பி விசா வைத்திருப்பவர்கள், அதே துறையில் பணிபுரியும் அமெரிக்கர்களை விட 9,000 முதல் 20,000 டாலர் வரை குறைவான ஊதியமே பெறுவதாக வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டப்படி சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தபோதிலும், இந்த ஊதிய இடைவெளி நிலவுவது உள்நாட்டு ஊதிய விகிதத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் லட்சக்கணக்கான எச்-1பி விசாக்களுக்கு விண்ணப்பித்த அதே வேளையில், 800,000 முதல் 1.
3 மில்லியன் அமெரிக்கப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சில நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்கர்களைக் கொண்டே, அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எச்-1பி விசா திட்டத்தின் முறைகேடான பயன்பாடு உள்நாட்டு ஊதியத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
சட்டப்பூர்வமாக சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தும், எச்-1பி விசா பணியாளர்கள் அமெரிக்கப் பணியாளர்களை விட மிகக் குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியைப் பாதிப்பதாகவும் அரசு கருதுகிறது.
விசா மோசடி, பணமோசடி மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக எச்-1பி விசா சார்ந்த அவுட்சோர்சிங் நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அரசு கூறியுள்ளது. புதிய உத்தரவின்படி, வெளியுறவுத்துறை, தொழிலாளர் துறை, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, வர்த்தகத் துறை மற்றும் கல்வித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எச்-1பி விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த ஆண்டில் பணியாளர்களை நீக்கம் செய்துள்ளதா அல்லது எதிர்காலத்தில் பணியாளர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து குடிவரவு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
தொழிலாளர் துறையின் ஊதியம் மற்றும் பணிநேரப் பிரிவு, கடந்த கால விண்ணப்பங்களை ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.



