இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி), தமிழக அரசின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான மாதந்திர செலவின அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை மாதத்தில் அரசின் மொத்த செலவினம் உச்சமாக ₹36,794.46 கோடியாக இருந்தது, இது ஆகஸ்ட் மாதத்தில் ₹25,123.82 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்த ஐந்து மாத காலத்தில் வருவாய் செலவினம் ₹1,38,140.12 கோடியாகப் பதிவாகியுள்ளது, இது மாநிலத்தின் மொத்த செலவில் 93.4 சதவீதமாகும். இதில் சம்பளம் மற்றும் வட்டி செலுத்துதல் தலா 16.7 சதவீதமாகவும், ஓய்வூதியம் 13.7 சதவீதமாகவும், மானியங்கள் 7.2 சதவீதமாகவும் உள்ளன.
துறைவாரியான தரவுகளின்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே பொருளாதார செலவினங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுத்துறை செலவினம் ₹12,528.39 கோடியிலிருந்து ₹10,553.89 கோடியாகக் குறைந்தது. அதேபோல், பொருளாதாரத் துறை செலவினம் ஜூலையில் ₹7,407.70 கோடியாக இருந்த நிலையில், ஆகஸ்டில் ₹2,081.82 கோடியாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.
மொத்த வருவாய் செலவினம் ₹9,203 கோடி குறைந்துள்ளது. வட்டி செலவு, ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவுகள் சேர்த்து சுமார் ₹3,922 கோடி குறைந்துள்ளன.
அதே நேரத்தில், மானியங்களுக்கான செலவு ₹1,856 கோடி அதிகரித்துள்ளது. எனவே, இந்தக் கணக்கீட்டின்படி, மொத்தமாக ஏற்பட்ட ₹9,203 கோடி செலவினக் குறைவில், பிற செலவினப் பிரிவுகளில் மட்டும் சுமார் ₹7,136 கோடி குறைந்துள்ளது.



