அமெரிக்க வெள்ளை மாளிகை, 'டிரம்ப் டிவி: தி எசென்ஷியல்ஸ் ஸ்டேஷன்' (TRUMP TV: The Essentials Station) என்ற பெயரில் 24 மணிநேர டிஜிட்டல் காணொளி சேவையை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. நிர்வாகத்தின் அறிவிப்புகள், அதிபரின் உரைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஒளிபரப்பும் நோக்கில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சிஎன்என் (CNN), எம்எஸ் நவ் (MS NOW) மற்றும் பொலிடிகோ (Politico) ஆகிய ஊடக நிறுவனங்கள், வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள சூழலில், இந்த புதிய டிஜிட்டல் சேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை மாலை 7 மணிக்கு (ET) வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இந்த சேவை நேரலையாகத் தொடங்கியது.
முன்னதாக, தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஊடக அங்கீகாரத்தை ரத்து செய்த வெள்ளை மாளிகையின் நடவடிக்கை, அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தின்படி தங்களின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி, அந்த மூன்று ஊடக நிறுவனங்களும் கூட்டாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. தங்களின் செய்திகளை அரசு தீர்மானிக்கக் கூடாது என்ற கொள்கையை நிலைநாட்டவே இந்த சட்டப் போராட்டத்தை மேற்கொள்வதாக அந்த நிறுவனங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி திமோதி கெல்லி முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதி கெல்லி, டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் நியமித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டு சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டாவின் ஊடக அனுமதி ரத்து செய்யப்பட்ட வழக்கையும் நீதிபதி கெல்லி கையாண்டிருந்தார்.
இந்த விவகாரத்தில், ஊடக நிறுவனங்களின் கோரிக்கையின் மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கு குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், 'போலிச் செய்திகளை வெளியிடும் சிஎன்என், பொலிடிகோ மற்றும் எம்எஸ் நவ் ஆகிய நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய வழக்குத் தொடர்ந்துள்ளன. இத்தகைய ஊடகங்களுக்கு ஏன் நான் அனுமதி வழங்க வேண்டும்?
இவர்களின் செயல்பாடுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படும் இத்தகைய ஊடகங்களை அனுமதிக்க முடியாது' என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை ஊடகக் குழுவில் (White House television pool) இருந்து சிஎன்என் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏபிசி (ABC), சிபிஎஸ் (CBS), பாக்ஸ் நியூஸ் (Fox News) மற்றும் என்பிசி (NBC) ஆகிய ஊடகங்களும் தங்களின் பங்கேற்பை நிறுத்தி வைத்துள்ளன. இதனால், வெள்ளை மாளிகையின் நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், நிர்வாகமே நேரடியாகத் தனது காணொளித் தளத்தின் மூலம் செய்திகளை வெளியிடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
