இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் நௌபர் மௌலவி உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்தத் தாக்குதலில் 270 பேர் உயிரிழந்தனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இலங்கை குடிமக்கள் மட்டுமின்றி 45 வெளிநாட்டினரும் உயிரிழந்தனர். 2009-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, இலங்கையில் நடந்த மிக மோசமான வன்முறைச் சம்பவமாக இது கருதப்படுகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் 23,000-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன நஷ்டஈடு வழங்க வேண்டும் என 2023-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சல்லே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தனி விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்குப் பின் அரசியல் நோக்கம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சுரேஷ் சல்லே மற்றும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் மறுத்துள்ளனர்.

