2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் மாரத்தான் பிரிவில் இந்தியாவின் சவான் பார்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், கடந்த 44 ஆண்டுகளாக ஆசிய விளையாட்டு மாரத்தான் போட்டியில் பதக்கம் வெல்ல முடியாமல் இருந்த இந்தியாவின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், 42.
195 கி. மீ தூரத்தை 2 மணி நேரம், 11 நிமிடங்கள் மற்றும் 37 வினாடிகளில் கடந்து பார்வால் இந்த வெற்றியைப் பதிவு செய்தார். இது அவரது தனிப்பட்ட சிறந்த நேரமாகும்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ராட்டர்டேம் மாரத்தான் போட்டியில் 2:11:58 என்ற நேரத்தில் கடந்து அவர் தேசிய சாதனை படைத்திருந்தார். அந்தச் சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார். பந்தயத்தின் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்த 28 வயதான பார்வால், 10 கி.
மீ தூரத்திற்குப் பிறகு முன்னணி வீரர்களுடன் கடுமையாகப் போட்டியிட்டார். பந்தயத்தின் இறுதி கட்டம் வரை பதக்கத்திற்கான வாய்ப்பில் நீடித்த அவர், ஜப்பானின் இச்சிதாகா யமஷிதா (2:10:49) தங்கப் பதக்கம் வென்ற நிலையில், பார்வால் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். சீனாவின் பெய்யோ ஃபெங் (2:12:13) வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மாரத்தான் பிரிவில் இந்தியா இதற்கு முன்பு 1982-ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்றிருந்தது. அப்போது ஹோசூர் குக்கப்பா சீதாராம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதற்கு முன்னதாக, 1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பார்வால் இந்தியாவுக்கு மீண்டும் மாரத்தான் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்த பார்வால், இந்த ஆண்டுதான் மாரத்தான் போட்டிகளில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.




