மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ஜெம் வீரமணி விவகாரத்தை முன்வைத்து திமுக மற்றும் அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் இளம்பெண்களையும், பச்சைப் பிள்ளைகளையும் நீண்டகாலமாகச் சீரழித்து வந்த ஒரு நபரின் வழக்கை திமுக அரசு மூடி மறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய முதல்வர், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏன் மௌனம் காக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழகமே இந்தக் கேள்வியை எழுப்புகிறது. ஸ்டாலின் சார், வாயைத் திறங்கள். பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசும் திமுகவும், அதிமுகவும் இந்த விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை?
இதில் கூடவா உங்களுக்குள் கூட்டு? ” என்று சாடினார். மேலும், அந்தக் குற்றவாளியைத் தவெக அரசுதான் சிறையில் அடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், தான் முதல்வராக வரவில்லை என்றும், உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே ஓட்டு கேட்டு வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க திமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக தற்போது திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டதாக விமர்சித்தார். ஜெயலலிதாவை அவமதித்த திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றபோதே அதிமுகவின் முகமூடி கிழிந்துவிட்டதாக அவர் கூறினார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் மற்றும் கொள்ளையை நோக்கமாகக் கொண்டவை என்று விமர்சித்த முதல்வர், தவெக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது என்பதால், தங்களைக் கண்டு அந்த இரு கட்சிகளும் அஞ்சுவதாகத் தெரிவித்தார். சட்டப்பேரவையில் தான் ஊழல் குறித்துப் பேசும்போது, திமுகவினர் ஆதாரங்களைக் கேட்டுத் தர்க்கம் செய்வதாகவும், தன்னை பேசவிடாமல் சத்தம் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், “ஊழல் செய்த கூட்டத்தை விடவே மாட்டோம். திமுகவால் இனி ஊழல் செய்யமாட்டேன் என்று சொல்ல முடியுமா? தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையேதான் போட்டி” என்று அவர் கூறினார்.
தவெக ஆட்சியை குறுக்கு வழியில் கவிழ்க்க திமுக திட்டமிடுவதாகவும், ஆனால் தவெக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “டெல்லியில் உள்ள திமுகவுக்குப் பெயர் பாஜக, தமிழகத்தில் உள்ள பாஜகவுக்குப் பெயர்தான் திமுக” என்று விமர்சித்தார். மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு 'விசில்' சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட முதல்வர், இந்த வாக்கு பெண்களை இழிவுபடுத்துபவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.




