ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் ஆர். வீரமணி தொடர்பான சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் பி.சி. தேன்மொழி ஐபிஎஸ் தலைமையில் இந்த சிறப்பு புலனாய்வுக் குழு செயல்பட உள்ளது. இதில் சட்டம்-ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர் ஜெ. முத்தரசி ஐபிஎஸ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் வி.வி. கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு சென்னை காவல் ஆணையரின் மேற்பார்வையில் செயல்படும்.
வழக்கின் பின்னணி
சிறுமிகளுக்கு பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 84 வயதான வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றிய கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரமணி தொடர்பான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் குறித்து 2025 அக்டோபர் 6-ஆம் தேதி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டதாகவும், மறுநாள் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு பல மாதங்கள் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இதற்கிடையே வீரமணிக்கு தொடர்புடைய சென்னை வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், சேலத்திலும் போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை மற்றும் அதை கையாண்ட விதம் தொடர்பாகவும் தற்போது விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
3 காவல் அதிகாரிகளுக்கு சம்மன்
இந்த வழக்கில் மிரட்டல் கும்பலுடன் சில காவல்துறையினர் இணைந்து செயல்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 2025 அக்டோபரில் சென்னை பாலியல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய உதவி ஆணையர் யாஸ்மின் மற்றும் ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜலட்சுமி ஆகிய மூன்று காவல் அதிகாரிகளும் துறை ரீதியான விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யார், விசாரணையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன, மேலும் இதில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட அம்சங்களில் விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


