2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மேற்கொண்ட தேர்தல் செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளின் அடிப்படையில், இந்தத் தேர்தலில் திமுக அதிகபட்சமாக 197 கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அதிக இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கட்சிகள் தங்களது ஒட்டுமொத்த பிரசாரச் செலவுகளைத் தனித்தனியாக ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. அதன்படி, திமுக தனது தேர்தல் செலவாக 197 கோடி ரூபாயைக் குறிப்பிட்டுள்ளது.
இதில், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்காக 47 கோடியே 95 லட்சம் ரூபாயும், மீதமுள்ள தொகை பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவுகள் உள்ளிட்ட கட்சி அளவிலான பிரசாரங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.
அதிமுக தனது தேர்தல் செலவாக 112 கோடி ரூபாயைத் தாக்கல் செய்துள்ளது. இதில் சுமார் 109 கோடி ரூபாய் பொதுப் பிரசாரத்திற்கும், 2 கோடியே 78 லட்சம் ரூபாய் வேட்பாளர்களுக்காகவும் செலவிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் அச்சிடும் பணிகளுக்காக 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட ஐந்து மாநிலங்களுக்கான ஒட்டுமொத்த செலவு விவரங்களைச் சமர்ப்பித்துள்ளன.
இதில், தமிழகத்தில் மட்டும் பாஜக 51 கோடியே 56 லட்சம் ரூபாயையும், காங்கிரஸ் 7 கோடி ரூபாயையும் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் செலவாக மொத்தம் 1 கோடியே 37 லட்சம் ரூபாயைக் கணக்கு காட்டியுள்ளது. இதில் பிரசாரத்திற்காக 93 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயும், நட்சத்திரப் பேச்சாளர்களுக்காக 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், இதர பயண மற்றும் விளம்பரச் செலவுகளும் அடங்கும். இதற்கிடையில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது தேர்தல் செலவு அறிக்கையை இதுவரை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கை வெளியான பிறகே, தேர்தல் செலவுப் பட்டியலில் அக்கட்சியின் நிலை குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.




