நெல்லை கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின், கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திருநெல்வேலி கே. டி.சி. நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கவினின் காதலியான சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், சுபாஷினியின் தந்தை மற்றும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன், மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரை சி.பி. சி. ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், "கொலை நடந்த இடத்திலேயே நாங்கள் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே எங்கள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஆர்.
விஜயகுமார் முன்னிலையில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேசமயம், சுர்ஜித்தின் உறவினர் ஜெயபால் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.



