கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்த்தி, மொத்தம் ரூ.2,610 ஆக நிர்ணயிக்க பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2027-28 ரபி சந்தைப்படுத்துதல் ஆண்டிற்கான இந்த விலை உயர்வுடன், பார்லி, கடலை, மசூர் பருப்பு மற்றும் கடுகு உள்ளிட்ட பிற ரபி பயிர்களுக்கான ஆதரவு விலையையும் உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கோதுமைக்கான ஆதரவு விலை அதன் உற்பத்திச் செலவை விட இருமடங்கிற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனுடன், மாநிலங்களுக்கு இடையே 135 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விநியோகிக்கும் வகையில், ரூ.1.86 லட்சம் கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் வழித்தடம்-3ம் கட்ட திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் எரிசக்தி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், டெல்லியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.1,789 கோடி செலவில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய அறிவுசார் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாகன அடர்த்திக்கு ஏற்ப தானாகவே மாறும் 1,092 சிக்னல்கள் அமைக்கப்படும்; இதில் அவசரகால வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வசதியும் இடம்பெறும்.



