அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி படை தளத்திலிருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 'ட்ரான்ஸ்போர்ட்டர்-18' என்ற பெயரிலான இந்த சிறிய செயற்கைக்கோள் பகிர்வு திட்டத்தின் கீழ், மொத்தம் 130 சுமைகளை சுமந்து கொண்டு இந்த ராக்கெட் புவி தாழ்வட்டப் பாதைக்கு சென்றது.
ராக்கெட்டின் முதல் நிலை பூஸ்டர், வெற்றிகரமாக பிரிந்து வாண்டன்பெர்க் தளத்தில் உள்ள லேண்டிங் ஜோன் 4-ல் தரையிறங்கியது. இந்த பூஸ்டர் பயன்படுத்தப்படுவது இதுவே 25-வது முறையாகும். முன்னதாக இது USSF-62, NROL-145, ஒன்வெப் லான்ச் 20 மற்றும் 21 ஸ்டார்லிங்க் விண்வெளி பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் மூலம் இதுவரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 1,800-க்கும் மேற்பட்ட சுமைகளை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இந்த பயணத்தில் இடம்பெற்றிருந்த பல்வேறு செயற்கைக்கோள்களில், கூகுள் நிறுவனத்தின் 'புராஜெக்ட் சன்கேட்சர்' (Project Suncatcher) முக்கியமானது. விண்வெளியில் கூகுளின் டென்சர் பிராசஸிங் யூனிட்கள் (TPUs) எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் பணிகளை விண்வெளியில் வேகப்படுத்த முடியுமா என்பது சோதிக்கப்பட உள்ளது. இது குறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில், "நமது டிபியூக்கள் விண்வெளியில் உயிர்வாழ முடியுமா? அதைத்தான் நாம் கண்டறியப் போகிறோம்.
பிளானட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த முன்மாதிரி செயற்கைக்கோள், ஸ்பேஸ் எக்ஸின் ட்ரான்ஸ்போர்ட்டர்-18 பயணத்தில் செல்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். விண்வெளியில் அளவிடக்கூடிய இயந்திர கற்றல் உள்கட்டமைப்பை உருவாக்க முடியுமா என்பதை ஆராயும் ஒரு நீண்டகால ஆராய்ச்சி முயற்சியே இந்த 'புராஜெக்ட் சன்கேட்சர்' என்று கூகுள் தெரிவித்துள்ளது.
புவி தாழ்வட்டப் பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் சூரிய ஒளியை தொடர்ந்து பெறுவதால், பூமியை விட எட்டு மடங்கு அதிக சூரிய சக்தியை உருவாக்க முடியும். எதிர்காலத்தில் பல செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை இணைப்பதன் மூலம், விண்வெளியிலேயே பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு பணிகளை கையாள முடியும் என்று கூகுள் கருதுகிறது. இது குறித்து கூகுள் தனது வலைப்பதிவில், "முக்கியமான தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஒரு பெரிய இலக்கிலிருந்தே தொடங்குகின்றன.
விண்வெளியில் வன்பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதே இந்த முதல் கட்டத்தின் நோக்கம். இதன் மூலம் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளது.




