பகல் நேர டெஸ்ட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருக்கும் சூழலில் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய விதிமுறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விளையாடும் இரு அணிகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே பிங்க் பந்துகளைப் பயன்படுத்த முடியும். போட்டி தொடங்குவதற்கு முன்பே இது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும். ஒருமுறை பிங்க் பந்துடன் ஆட்டம் தொடங்கப்பட்டால், போட்டி முடியும் வரை அதையே பயன்படுத்த வேண்டும்; சிவப்பு பந்துக்கு மாற அனுமதி இல்லை.
இதனிடையே, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான விதிமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டி20 போட்டிகளில் 15 நிமிட இடைவேளை நிலையானது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் ஆட்ட நேரம் பாதிக்கப்பட்டால் இதை 10 நிமிடங்களாகக் குறைத்துக்கொள்ளலாம். மேலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தண்ணீர் இடைவேளையின் போது தலைமைப் பயிற்சியாளர் அல்லது அவர் நியமிக்கும் நபர் களத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.





