கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளுக்காக நாடு முழுவதும் மொத்தம் 2,168.78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசம் 438.27 கோடி ரூபாயும், குஜராத் 426.13 கோடி ரூபாயும் பெற்று முதலிடங்களில் உள்ளன. கர்நாடகா 109.11 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது.
அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் இவை முன்னணியில் இருந்தாலும், பதக்கப் பட்டியலில் தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
குறைவான நிதி ஒதுக்கீடு பெற்ற போதிலும், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் பதக்கங்களை வெல்வதில் முன்னிலை வகிக்கின்றன.
தமிழ்நாடு 20.40 கோடி ரூபாய் நிதியைப் பெற்று 16 பதக்கங்களையும், தெலுங்கானா 17.77 கோடி ரூபாய் நிதியைப் பெற்று 17 பதக்கங்களையும் வென்றுள்ளன.
தேசிய அளவில் 100 கோடி ரூபாய் நிதிக்கு சராசரியாக 4.8 பதக்கங்கள் என்ற விகிதமே உள்ள நிலையில், தமிழ்நாடு 100 கோடி ரூபாய்க்கு 53.9 பதக்கங்களையும், தெலுங்கானா 50.6 பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளன.




