திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் இன்று தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதற்காக தாராபுரம் - உடுமலை சாலையில் உள்ள மாருதி நகரில் 54 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இந்தப் பொதுக்கூட்டத்தில் 10,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகளவிலான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க சுமார் 7,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பொதுக்கூட்டத்திற்கான குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. முதல்வர் வருகையையொட்டி தாராபுரத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல் தாராபுரம் நகருக்குள் வந்து செல்லலாம். ஒட்டன்சத்திரம் வழியாக வரும் கனரக வாகனங்கள் உடுமலை-பொள்ளாச்சி வழியாகவும், கரூர் வழியாக வரும் கனரக வாகனங்கள் பழநி-பொள்ளாச்சி வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன. திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களுக்கும் சில பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


