தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் ஒன்பது கொலைகள் நடந்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலி, சென்னை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கொலைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பாதுகாப்பற்ற இந்த ரீல்ஸ் ஆட்சியை முதல்வர் விஜய் யாருக்காக நடத்துகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார். இனியும் காலம் கடத்தாமல் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் பெற்றோரின் கண் முன்பே படுகொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும், கொலைச் சம்பவங்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிகரித்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
திமுகவை விமர்சிப்பதில் காட்டும் அக்கறையை, தன் வசம் உள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் முதல்வர் காட்டியிருந்தால் இத்தகைய கொடூரங்களைத் தடுத்திருக்க முடியும் என கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இனியாவது முதல்வர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.





