தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 'மஞ்சப்பை திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டத்தை, தற்போது 'துணிப்பை திட்டம்' என பெயர் மாற்றம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 105 துணிப்பை வழங்கும் இயந்திரங்களை பராமரிக்கவும், துணிப்பைகளை விநியோகம் செய்யவும் ஒப்பந்தப்புள்ளிகளை (டெண்டர்) வாரியம் கோரியுள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், ஒரு ஆண்டு காலத்திற்கு துணிப்பைகளை கொள்முதல் செய்தல், வாராந்திர இயந்திர ஆய்வு மற்றும் சேவை மையங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒப்பந்த நிபந்தனைகளின்படி, 110 ஜிஎஸ்எம் (GSM) மற்றும் 20எஸ் (20S) தரம் கொண்ட துணிப்பைகளை ஒரு பைக்கு 5 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய வேண்டும். மேலும், வாரியத்தின் தலைமை மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு வாராந்திர அறிக்கைகளை சமர்ப்பிப்பதோடு, கையிருப்பு மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க ஆன்லைன் தளத்தையும் பராமரிக்க வேண்டும். வாரண்டி காலம் முடிந்த பிறகு ஏற்படும் பழுதுபார்ப்பு செலவுகளை ஒப்பந்த நிறுவனமே ஏற்க வேண்டும்; இயந்திரங்களை மாற்ற வேண்டிய சூழலில், வாரியம் அதற்கான செலவை வழங்கும். ஒரு வாரத்திற்கு மேலாக இயந்திரம் பழுதாகி இருந்தால், அந்த நிறுவனம் சொந்த செலவில் மாற்று இயந்திரத்தை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




