தமிழகத்தில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், 'வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.
5 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும், தலா 10 பெண் தொழில்முனைவோரைத் தேர்வு செய்து இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பெண்கள் குறைந்தபட்சம் 51 சதவீத பங்குகளைக் கொண்டிருக்க வேண்டும்.
உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் இந்த நிதி உதவி பயன்படுத்தப்படலாம். இக்கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9. 95 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடனைப் பெறுபவர்கள் 9 ஆண்டுகளுக்குள் அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு எவ்வித ஆய்வுக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான தொழில்முனைவோருக்கு நிதி உதவி வழங்கப்படும்.





