தமிழகத்தில் சன்ன ரக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது 26 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை அரிசி சில்லறை விற்பனையில் 2,100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் தேவைக்காக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கும் சூழல் நிலவுகிறது. சர்வதேச சந்தையில் அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதால், மத்திய அரசு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வேளாண் வணிகப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், ஏற்றுமதி தொடர்பான முடிவுகளை மத்திய அரசு மட்டுமே எடுக்க இயலும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நெல் வரத்து குறைவு மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வால், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அரிசி விலை கிலோ 100 ரூபாயைத் தொட வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர். சம்பா பருவ அறுவடை பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே வருவதால், குறுகிய காலத்தில் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக வியாபாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.





