தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வின்படி, தேசிய சராசரி 3.20 சதவீதமாக இருக்க, தமிழகத்தில் 4.30 சதவீதத்தினர் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுநீரக பாதிப்புக்கு நீரிழிவு நோய், துரித உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை முக்கிய காரணங்களாக உள்ளன. இதனால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி டயாலிசிஸ் செய்ய முடியாமல் பொருளாதார ரீதியாக நிலைகுலைந்து போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது 146 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே டயாலிசிஸ் வசதி உள்ள நிலையில், இது போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.
எனவே, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 500 இடங்களில் டயாலிசிஸ் மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்காக சுமார் 608 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்றும், சிறுநீரக பாதிப்பைத் தடுக்க விழிப்புணர்வு மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





