அமெரிக்க அரசு, இந்திய ஏற்றுமதியாளர்களிடம் இருந்து வசூலித்த ரூ.95,000 கோடிக்கும் அதிகமான கூடுதல் சுங்க வரியைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ், அமெரிக்காவுடன் அதிக வர்த்தக உபரி கொண்ட நாடுகளை இலக்காகக் கொண்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா சுங்கவரி விதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு 7-ஆம் தேதி முதல் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 25 சதவீத பரஸ்பர சுங்கவரி விதிக்கப்பட்டது.
பின்னர், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் காரணம் காட்டி ஆகஸ்டு 27-ஆம் தேதி மேலும் 25 சதவீதம் விதிக்கப்பட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் 50 சதவீதம் வரை கூடுதல் சுங்கவரி சுமையை எதிர்கொண்டனர்.இந்த சுங்கவரி விதிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 20-ஆம் தேதி அந்த வரிகளை அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, வசூலிக்கப்பட்ட தொகையை ஏற்றுமதியாளர்களுக்குத் திருப்பி வழங்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விரிவான நிர்வாக வழிமுறைகளை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு (CBP) வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.95,000 கோடி) அதிகமான தொகை திருப்பி கிடைக்க உள்ளது என்று தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஜவுளி, பொறியியல் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் பல்வேறு உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் இந்த நடவடிக்கையால் அதிக பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நேரடி தொடர்பு வங்கி இல்லாத இந்திய வங்கிகள் இந்தத் தொகையை எவ்வாறு பெறுவது என்ற குழப்பம் இருந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி (RBI), 'அமெரிக்காவில் கிளைகள் அல்லது முகமை வங்கி வசதி கொண்ட வங்கிகள் மூலமாக வசூல் கணக்குகளைத் திறந்து இந்தத் தொகையைப் பெறலாம்' என்று தெரிவித்துள்ளது. இதனால் வங்கி தொடர்பான முக்கிய தடைகள் நீங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
1Likes
0Dislikes
