மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் மீண்டும் வருவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுப்பதில் புதிய தடுப்பூசி ஒன்று வியக்கத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிட்னியைச் சேர்ந்த விஞ்ஞானி பேராசிரியர் ஜார்ஜினா லாங் தலைமையிலான இந்த உலகளாவிய மருத்துவ ஆய்வு, புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
மெலனோமா இன்ஸ்டிடியூட் ஆஸ்திரேலியாவின் மருத்துவ இயக்குநரும், சிட்னி பல்கலைக்கழகத்தின் மெலனோமா மருத்துவ புற்றுநோயியல் பேராசிரியருமான ஜார்ஜினா லாங், இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளராகச் செயல்பட்டார். இந்த ஆய்வின் முடிவுகள், புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. மெலனோமா பாதிப்பு நீக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளுக்கு, 'இன்டிஸ்மெரன்' (intismeran) எனப்படும் இந்தத் தடுப்பூசி வழங்கப்பட்டது.
வழக்கமான 'பெம்ப்ரோலிசுமாப்' (pembrolizumab) எனப்படும் நோய் எதிர்ப்பு சிகிச்சை மருந்தை மட்டும் எடுத்துக்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்திய நோயாளிகளுக்கு புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது உயிரிழப்பதற்கான வாய்ப்பு 42 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாடர்னா மற்றும் எம்எஸ்டி (MSD) ஆகிய மருந்து நிறுவனங்கள் இணைந்து இந்தத் தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
இது ஒவ்வொரு நோயாளியின் கட்டியின் மரபணு பண்புகளுக்கு ஏற்ப பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் எம்ஆர்என்ஏ (mRNA) வகை தடுப்பூசியாகும். புற்றுநோய் செல்கள் உருவாகும் போது ஏற்படும் அசாதாரண புரதங்களை (neoantigens) இந்தத் தடுப்பூசி இலக்காகக் கொள்கிறது. இதன் மூலம், நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க இது உதவுகிறது.
இந்த ஆய்வு குறித்துப் பேசிய பேராசிரியர் ஜார்ஜினா லாங், 'ஆரம்பக்கட்ட மெலனோமா நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, முற்றிலும் புதிய முறையில் சிகிச்சை அளிக்க முடியும் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. மின்னஞ்சல் கண்டுபிடிப்பு தகவல் பரிமாற்றத்தை எப்படி மாற்றியமைத்ததோ, அதேபோல தனிப்பயனாக்கப்பட்ட இந்த நியோஆன்டிஜென் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை முறையையே மாற்றியமைக்கும் திறன் கொண்டது' என்று தெரிவித்தார்.
உலகம் முழுவதும் 157 மையங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 1,137 நோயாளிகள் பங்கேற்றனர். இவர்களில் யாருக்கும் இதற்கு முன்பு புற்றுநோய்க்கான மருந்து சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் உள்ள மெலனோமா இன்ஸ்டிடியூட், வெஸ்ட்மீட் மருத்துவமனை, இளவரசி அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை மற்றும் விக்டோரியாவில் உள்ள பாலா பாக்ஸ் மெலனோமா மற்றும் புற்றுநோய் மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆஸ்திரேலிய எம்ஆர்என்ஏ புற்றுநோய் தடுப்பூசி மையத்தின் இயக்குநர் அசோசியேட் பேராசிரியர் செத் சீதம், இந்த முடிவுகளை ஒரு முக்கிய திருப்புமுனையாக வர்ணித்தார். 'இந்தத் தொழில்நுட்பம் செயல்படுகிறது என்பதையும், இது புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அபாயத்தைக் குறைத்து சிறந்த பலன்களைத் தருகிறது என்பதையும் உறுதிப்படுத்தும் முதல் பெரிய அளவிலான ஆய்வு இதுவாகும்.
இதுவே மருத்துவத் துறையில் தங்கத் தரமாக (gold standard) கருதப்படுகிறது' என்று அவர் கூறினார். மெலனோமாவுக்கு அப்பால், நுரையீரல், சிறுநீரகம், தலை மற்றும் கழுத்து, சிறுநீர்ப்பை உள்ளிட்ட பிற புற்றுநோய் சிகிச்சைகளிலும் இந்தத் தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பேராசிரியர் லாங் நம்பிக்கை தெரிவித்தார். புற்றுநோய் மருந்து உருவாக்க வரலாற்றில் இது போன்ற ஒரு சாதனை இதுவரை எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

