வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், அது புயலாக வலுப்பெற்று ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று (23-ம் தேதி) உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று (24-ம் தேதி) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை (25-ம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, வரும் 26-ம் தேதி புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே இந்த புயல் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானிலை மாற்றங்களால், கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (25-ம் தேதி) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி. மீ.
வேகத்திலும், இடையிடையே 55 கி. மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவுகளின்படி, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிகபட்சமாக 16 செ. மீ. மழை பதிவாகியுள்ளது.
சின்னகாமன்பட்டியில் 14 செ. மீ. , திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராப்பட்டியில் 13 செ.
மீ. , மற்றும் கடலூர், மதுரை, திருவாரூர், ஈரோடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் 10 முதல் 11 செ. மீ.
வரை மழை பதிவாகியுள்ளது.





