தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 23-ம் தேதி வரை தமிழகத்தில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 23-ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் 26 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை வானிலை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்துவதுடன், சூடான உணவுகள், சூப், ரசம், பால், டீ மற்றும் காபி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பழச்சாறுகளைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. மேலும், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைக்கான மருந்துகளை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.
மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. வீடுகளில் உள்ள மின்விளக்குகள் மற்றும் மின்சாதனங்களை கவனமாக கையாள வேண்டும். பழுதடைந்த மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
மின்மாற்றிகள், மின்கம்பிகள் மற்றும் மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகளைத் தொடக்கூடாது. இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் தொலைக்காட்சி, கணினி, செல்போன், மிக்சி மற்றும் கிரைண்டர் போன்ற மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டின் சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுடன், மழையின் போது பச்சை மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





